
கோலாலம்பூர், டிச 29 – அண்மையில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் அவர்களின் ஜனநாயகம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 85,000 பேர் அமரும் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் பெரிய வரலாற்று நிகழ்ச்சியாக நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பெறப்பட்ட நிதியில் நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கும் நன்கொடை வழங்கினால் அது சிறப்பாக இருக்கும் என மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாடு , நலனபிவிருத்திச் சங்கம் மற்றும் மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான வெற்றிவேலன் மகாலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விஜய் நிகழ்ச்சியின் குறைந்த பட்ச டிக்கெட் வசூல் 25 மில்லியன் ரிங்கிட் வசூல் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனையைக் கொண்டாடும் அதே வேளையில், மலேசிய தமிழ் ரசிகர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் விஜய் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைத்து தரப்பினரும் மலேசிய தமிழ்ப் பள்ளிகள் கல்வி மேம்பாடு, மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால நிலைத்தன்மையைப் பற்றி சிந்திக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளனர் என வெற்றிவேலன் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு தனிநபரையோ அல்லது ஆதரவாளரையோ குற்றம் சாட்டவோ அல்லது விமர்சிக்கும் நோக்கம் எங்களுக்கு கிடையாது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் தங்கள் பணத்தை சுதந்திரமாக சம்பாதிக்கவும் செலவழிக்கவும் உரிமை உண்டு.
மலேசியாவில் உள்ள தமிழ் சமூகத்தின் அவசர கல்வித் தேவைகளை முன்னிலைப்படுத்துவதே தங்களது தரப்பின் நோக்கம் என வெற்றிவேலன் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது இருக்கும் 528 தமிழ்ப்பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட பல தமிழ்ப் பள்ளிகளில் அதன் கட்டமைப்பின் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளன.
சில தமிழ்ப்பள்ளிகள் போதுமான மாணவர்கள் இல்லாததால் மூடப்படும் மற்றும் அவசர இடமாற்ற பிரச்னைகளையும் எதிர்நோக்கியுள்ளன.
பல பள்ளிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கும் புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கும் அவசரமாக நிதி தேவைப்படுகிறது.
பலமுறை முறையீடுகள் செய்யப்பட்டபோதிலும் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான போதுமான கவனமும் அற்கான ஆதரவும் குறைவாகவே உள்ளன.
அதே வேளையில் நாட்டில் பெரிய அளவில் நடைபெறும் அனைத்துலக நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்கும் நிதி வழங்க அதன் ஏற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும் என வெற்றி வேலன் கேட்டுக் கொண்டார்.



