
சென்னை, ஏப்ரல்-19- ‘மாநகரம்’ படப்புகழ் நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி சமூக ஊடகங்களிலிருந்தும் அவர் தற்காலிமாக ஓய்வெடுத்து வருவதாக, ஸ்ரீயின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
‘மாநகரம்’ படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அவ்வறிக்கையை தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீ தனது மீட்பு மற்றும் நல் வாழ்வில் கவனம் செலுத்துவதால் அவரின் தனிமை மற்றும் தனி உரிமைக்கான தேவையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேட்டி என்ற பெயரில் தேவையற்ற யூகங்களை எழுப்புவதையும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதையும் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட செய்திகளையும் வீடியோக்களையும் அகற்றுமாறும் அனைத்து ஊடகங்களுக்கும் ஸ்ரீயின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீ மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டுமென்பதை புரிந்து, அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அவ்வறிக்கை மேலும் கூறியது.
சில காலம் சினிமாவிலும் வெளியிலும் காணப்படாத ஸ்ரீ, அண்மையில் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளால் பரபரப்பானார்.
ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து காணப்பட்டதோடு, அரைகுறை ஆடைகளோடு ஆபாச வீடியோக்களையும் பகிர்ந்திருந்தார்.
இதனால் இரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், ஸ்ரீ போதைக்கு அடிமையாகி விட்டாரோ, அதனால் தான் இப்படியெல்லாம் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்று வதந்திகளை பரப்பியது குறிப்பிடத்தக்கது.