
ஃபுளோரிடா, அக்டோபர்-7,
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தில், தன் நண்பனை வகுப்பறையிலேயே எப்படி கொலைச் செய்யலாம் என 13 வயது சிறுவன் ChatGPT செயலியிடம் ஆலோசனைக் கேட்டுள்ளான்.
அவனது செயல் Gaggle எனும் பள்ளிக் கண்காணிப்பு சேவையால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த Gaggle என்பது, பள்ளிகளே தருவிக்கும் கருவிகளில மாணவர்களின் இணைய செயல்பாட்டை ஆய்வு செய்யும் தளமாகும்.
அவ்வகையில் அம்மாணவனின் ‘வன்முறையான’ இந்த கேள்வியைக் கண்காணித்து பள்ளி அதிகாரிகளுக்கு Gaggle தகவல் வழங்கியது.
அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் அவனது பெற்றோரை தொடர்பு கொண்டதோடு, அவனை வகுப்பிலிருந்தும் உடனடியாக நீக்கியது.
வகுப்பில் நண்பனின் சேஷ்டை தாங்காமல் ஒரு விரக்தியிலேயே அவ்வாறு செய்ததாக மாணவன் கூறியுள்ள நிலையில், போலீஸார் மற்றும் பள்ளி பாதுகாப்பு குழுவினர் முழு விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கொலைச் செய்ய இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட மாணவர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் AI, மாணவர் பாதுகாப்பு, தனியுரிமை, உள்ளடக்க மேலாண்மை ஆகியவை குறித்து மீண்டும் சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.