
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-24,
நாட்டின் முன்னணி தமிழ் மின்னியல் ஊடகமான வணக்கம் மலேசியா நிறுவப்பட்டு 21 ஆண்டுகள் ஆகின்றன.
சவால்மிக்க இந்த டிஜிட்டல் காலத்தில் இதுவொரு நீண்ட நெடிய சாதனையாகும்.
அதனைக் கொண்டாடும் விதமாக ஜூன் 20-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, Tropicana Golf & Country Resort-டில் மாபெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், நிதி ஆதரவாளர்கள், வாடிக்கையாளர்கள் என சுமார் 500 வருகையாளர்களுடன் அவ்விழா களைக் கட்டியது.
தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ ச்சிங், பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன், பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் சிறப்பு வருகைப் புரிந்தனர்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம், செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், ம.இ.கா தேசிய உதவித் தலைவரும் முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ T.முருகையா, DSK எனப்படும் Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார் உள்ளிட்டோரும் வருகைத் தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இவ்விழாவின் சிறப்பம்சமாக, வணக்கம் மலேசியாவின் மலாய் பதிப்பான Telus Malaysia செய்தியும் அறிமுகம் கண்டது.
துணையமைச்சர் தியோ நீ ச்சிங்கும், வணக்கம் மலேசியாவின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான தியாகராஜன் முத்துசாமியும் இணைந்து மேடையில் அதனை அதிகாரப்பூர்வாக அறிமுகம் செய்து வைத்தனர்.
வணக்கம் மலேசியாவைப் போலவே இந்த Telus Malaysia-வும் இனி உங்களுக்கு சுடச் சுடச் செய்திகளைக் கொண்டு வரும்.
செய்திகளோடு நிற்காமல் தனது சமூகக் கடப்பாட்டையும் தொடர்ந்து உறுதிச் செய்து வரும் வணக்கம் மலேசியா, இந்த கொண்டாட்டத்திலும் அதை நிரூபித்தது.
அவ்வகையில் தத்தம் துறைகளில் சவால்களை முறியடித்து, சாதித்த நால்வருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
விவேக விவசாயத் தொழில்முனைவோர் ஜெகன் பெருமாளுக்கு Empowered Spirit Icon விருதும், புற்றுநோய் தன்னார்வலர் லாவணியா கணபதிக்கு Compassion Spirit Icon விருதும், கண் பார்வை இழந்தும் கேக் தயாரிப்பில் முத்திரைப் பதிக்கும் ஹேமரூபன் கிருஷ்ணமூர்த்திக்கு Endurance Spirit Icon விருதும், சிறைக் கம்பிகள் சாதிக்கத் தடையில்லை என நிரூபித்த மகேஸ்வரன் சுந்தரமூர்த்திக்கு Rising Spirit Icon விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவை மேலும் மெருகூட்டும் வகையில் இசை மற்றும் மேடைப் படைப்புகளுடன் அதிர்ஷ்ட குலுக்கும் நடைபெற்றது.
சவால் மிக்க செய்தித் துறையில் ஒரு சில ஆண்டுகள் தாக்குப் பிடிப்பதே அபூர்வம் என்ற நிலையில், 21 ஆண்டுகளாக மக்களுக்கு தொடர்ந்து சுடச் சுட அதுவும் தரமான செய்திகளைக் கொண்டு சேர்த்து, உள்ளூர் ஊடகத் துறையில் தன்னிகரற்ற இடத்தில் வணக்கம் மலேசியா வீற்றிருக்கிறது.
இதே போல் புது வரவான Telus Malaysia இணையச் செய்தியும் நம்பகத்தன்மையான செய்தியாக வலம் வருமென எதிர்பார்ப்போம்.