Latestமலேசியா

”நன்றி பிரதமரே! : மக்களின் பொருளாதாரம் வலுப்பட்டு, அனைத்து இனங்களும் பாதுகாக்கப்படும் – ரமணன் பாராட்டு

கோலாலாபூர், ஜூலை-23- மக்கள் நலத்திட்ட அறிவிப்புகள் மூலம் மலேசியர்களின் மனங்களை குளிர வைத்துள்ளார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு புகழாரம் சூட்டினார்.

இனம், மதம், பின்புலம் என்ற எந்தவொரு பாகுபாடுமின்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மடானி அரசாங்கத்தின் உறுதியான கடப்பாட்டுக்கு, இதுவே தக்க சான்று என்றார் அவர்.

ரொக்க உதவி, இலக்கிடப்பட்ட மானிய முறை, வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்கும் முன்னெடுப்புகள், வரலாறு காணாத வெளிநாட்டு முதலீடுகள் என, இந்தியர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரையும் மேம்படுத்த மடானி அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.

எனவே, சரியான நேரத்தில் சரியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள பிரதமருக்கு மக்கள் சார்பில் நன்றித் தெரிவித்துக் கொள்வதாக ரமணன் கூறினார்.

18 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad வாயிலாக 100 ரிங்கிட் மதிப்பிலான SARA நிதியுதவி, SARA & STR உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு இவ்வாண்டு 15 பில்லியனாக அதிகரிக்கப்பட்டது போன்றவையே, மக்களை அரவணைத்துச் செல்லும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதாரமாகும்.

இந்நிலையில், ஏழைகள் மற்றும் பரம ஏழைகளுக்கு உதவும் நோக்கில் நாளை புதிதாக Sejahtera MADANI என்ற மற்றொரு திட்டமும் அறிமுகம் காணவிருக்கிறது.

இப்படி, மக்களின் தேவையறிந்து, மடானி அரசாங்கம், மலாய்க்காரர், சீனர், இந்தியர், சபா—சரவாக்கியர் என அனைத்து மலேசியர்களுக்கும் வேலை செய்கிறது.

மக்களின் நல்வாழ்வு, பொருளாதார உயர்வு மற்றும் தேசிய ஒருமைப்பாடே அரசாங்கத்தின் முக்கியக் குறிக்கோள்; மக்களின் பேராதரவோடு அக்குறிக்கோள்கள் நிறைவேறுமென, ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!