
புத்ரா ஜெயா , ஜன 13 – நவீன் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை இன்று தள்ளுபடி செய்த மேல் முறையீட்டு நீதிமன்றம், அந்த அனைத்து நபர்களையும் எதிர்வாதம் செய்யும்படி உத்தரவிட்டது.
இந்த கொலை வழக்கு மீண்டும் ஜார்ஜ் டவுன் உயர் நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படும்.
நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதை அரசு தரப்பு நிருபித்துள்ளதாக மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்றிருந்த நீதிபதி Che Ruzima Ghazali தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எழுப்பிய வாதங்களில் நாங்கள் உடன்படுகிறோம். நவீன் கொலை வழக்கை நிராகரித்த முடிவில் உயர் நீதிமன்ற நீதிபதி தவறு செய்துவிட்டார் என்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்ததாக தனது தீர்ப்பில் Ruzima கூறினார்.
இந்த வழக்கை செவிமடுத்த நீதிபதி குழுவில் இடம் பெற்ற இதர இரண்டு நீதிபதிகள் Zaini Mazlan மற்றும் Noorin Badaruddin ஆகியோராவர்.
மேலும் வழக்கு விசாரணை தொடங்கி முடிவடையும்வரை குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரும் மீண்டும் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்றும் மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த நால்வரும் 2023 ஆம்ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக அரசு தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.
புக்கிட் குளுகோரில் (Bukit Gelugor) உள்ள பூங்கா ஒன்றில் பதின்ம வயதுடைய கும்பல் ஒன்று நடத்திய கொடூரமான தாக்குதலில் நவீன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அதோடு அபாயகரமான ஆயுதங்களின் மூலம் நவீனின் நண்பரான T.பிரவினை தாக்கிய குற்றச்சாட்டில் அந்த நால்வரும் விடுதலை செய்யப்பட்ட முடிவையும் மாற்றிய மேல் முறையீடு நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டு குறித்தும் எதிர்வாதம் செய்யும்படி உத்தரவிட்டது.
அந்த சம்பவத்தின்போது நவீனுடன் இருந்த பிரவின், தனது கண்கள் மற்றும் தலையில் கடுமையாக காயம் அடைந்தார்.