2026 தைப்பூசம்: பத்து மலை ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணிகள் தொடக்கம்

பத்து மலை, ஜனவரி-5,
தைப்பூசத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலக்கட்டமே எஞ்சியுள்ள நிலையில், பத்து மலை திருத்தலத்தில் 2026 தைப்பூச முன்னேற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, நேர்ந்திக்கடன் செலுத்த வரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக, பத்து மலை ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மரங்களை வெட்டி அப்புறப்படுத்துதல், மண்ணை சரிசெய்தல் என வேலைகள் முழுவீச்சில் நடைபெறுவதாக, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
ஏராளமான பக்தர்கள் முன்கூட்டியே அதாவது தை மாதத் தொடக்கத்திலேயே நேர்த்திக்கடன் செலுத்துவர் என்பதால், இப்போதே ஆற்றங்கரை சுத்தம் செய்யப்படுவது அவசியம் என்றார் அவர்.
பக்தர்களின் வசதிக்காக செய்யப்படுவதால், ஆற்றங்கரை மற்றும் பத்து மலை வளாகத்தில் அவர்கள் தூய்மையைப் பேணுவர் என எதிர்பார்ப்பதாகவும் நடராஜா சொன்னார்.
கடந்த ஆண்டுகளைப் போல் இவ்வாண்டும் பத்து மலை தைப்பூசம் விமரிசையாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி தைப்பூச தினத்தை கோலாகலமாகக் கொண்டாடவுள்ளனர்.



