
கோலாலம்பூர், ஆகஸ்ட்-10 – சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை 90 வயதுகளிலும் நிரூபித்தவரான நாட்டின் வயது முதிர்ந்த விரைவோட்டக்காரர் (sprinter) புஷ்பநாதன் லெட்சுமணன், தனது 95-ஆவது வயதில் தேக ஓட்டத்தை நிறுத்தியுள்ளார்.
வீட்டில் தவறி விழுந்த பிறகு ஈப்போ பெரிய மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அவரின் உயிர் பிரிந்தது.
ஓய்வுப் பெற்ற ஆங்கில ஆசிரியரான புஷ்பநாதன், ஓட்டப்பந்தயத்தின் மீது கொண்டு தீராத ‘காதலால்’ 2018-ஆம் ஆண்டு மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் முதன் முதலாக பங்கேற்றார்.
முதல் பங்கேற்பிலேயே 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர், தொடர்ந்து பல்வேறு மாஸ்டர்ஸ் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தார்.
வயதை மீறிய உடல் சுறுசுறுப்பாலும் வேகத்தாலும் ‘Turbo Grandpa’ என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்ட புஷ்பநாதன், தனது 93 வயதில் 100 மீட்டர் ஓட்டத்தை 32.4 வினாடிகளில் ஓடி முடித்தார்.
75 வயதுக்கு மேற்பட்டவர்களுகான அப்பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்ததோடு, 90 வயதை கடந்த ஒரே ஓட்டக்காரராகவும் திகழ்ந்தார்.
2023-ல் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய அனைத்துலக மாஸ்டர்ஸ் ஓட்டப்பந்தயப் போட்டியில் 90 முதல் 94 வயதுக்குட்பட்டவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில், 28.74 வினாடிகளில் ஓடி முடித்து தங்கம் வென்றார்.
அதே போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 88.8 வினாடிகளை அவர் பதிவுச் செய்தார்.
1998-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியின் போது ஓட்டப்பந்தயப் பிரிவுக்கான தொழில்நுட்ப அதிகாரியாகவும் இவர் பணியாற்றியுள்ளர்.
வாழ்க்கை முழுவதும் தடகளத்தில் கழித்த புஷ்பநாதன் நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம்.
குறிப்பாக வாழ்க்கையில் சாதிக்க வயதை ஒரு காரணமாகக் கூறுவோருக்கு….