
கோலாலம்பூர், பிப்ரவரி-16 – 2023-ல் 3.6 விழுக்காடாக பதிவான மலேசியப் பொருளாதார வளர்ச்சி, கடந்தாண்டு 5.1 விழுக்காடாகப் பதிவாகியிருப்பதானது, மடானி பொருளாதாரக் கொள்கை ஆக்கப்பூர்வமானது என்பதற்கான சான்றாகும்.
குறிப்பாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் அக்கொள்கை வெற்றியளித்திருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதில் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் deficit fiscal எனப்படும் நிதிப் பற்றாக்குறையும் குறைந்துள்ளது.
அதாவது வருமானத்தை மீறிய செலவு 4.3 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வெறும் 4.1 விழுக்காடாக மட்டுமே பதிவாகியிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீடுகள் 12 விழுக்காடு உயர்ந்துள்ளன; குறிப்பாக மின்சாரம் மற்றும் மின்னியல் துறையில் தொடர்ந்து வளர்ந்து வரும் ஏற்றுமதிகளால் இந்த வலுவான வளர்ச்சி உந்தப்பட்டது.
சுற்றுலா துறையின் மீட்சி மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக டத்தோ ஸ்ரீ அன்வார் தனது facebook பக்கத்தில் தெரிவித்தார்.
மக்களின் நீடித்த வளப்பத்திற்கு, இந்த நேர்மறையான வேகத்தைத் தக்க வைக்கவும் செயல்திறனை மேம்படுத்தவும் மடானி அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என்று பிரதமர் உத்தரவாதமளித்தார்.