
செப்பாங், பிப் 25 – நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த 88 பேரின் முயற்சியை AKPS எனப்படும் மலேசிய எல்லை பாதுகாப்பு கட்டுப்பாட்டு நிறுவனம் முறியடித்துள்ளது.
அவர்கள் அனைவரும் KLIA அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். நேற்று காலை மணி 11.30 முதல் மாலை 6 மணிவரை KLIA அனைத்துலக விமான நிலயத்தின் முதலாவது முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டதாக மலேசிய எல்லை பாதுகாப்பு நிறுவனத்தின் KLIA வுக்கான Komander இப்ராஹிம் முகமட் யூசோப் ( Ibrahim Mohd Yusof ) தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 110 வெளிநாட்டினரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அவர்களில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 80 ஆடவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என்பது தெரியவந்தது.
அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுவதை தவிர்க்க முயன்றதோடு அனுமதியின்றி நாட்டிற்குள் உள்ளே நுழைய முயன்றனர் என இன்று வெளியிட்ட அறிக்கையில் இப்ராஹிம் முகமட் கூறினார்.