நான்காவது 2025 மிட்லண்ட்ஸ் தேசிய சதுரங்க போட்டியில் ஊக்கமளிக்கும் மாணவர்களின் பங்கேற்பு

ஷா ஆலாம், ஜூலை-27 – 2025 மிட்லண்ட்ஸ் தேசிய சதுரங்க போட்டி நான்காவது முறையாக நேற்று, ஷா ஆலாம் மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது.
மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் மேலாளர் வாரியம் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
நாடளாவிய நிலையில் தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 1326 மாணவர்களும் இதில் பங்கேற்றனர்.
பள்ளிகளை எடுத்துக் கொண்டால், 110 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
8 வயதுக்குக் கீழ், 17 வயதுக்குக் கீழ் என ஆண் பெண் இரு பாலருக்கும் பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது; ஒவ்வோர் ஆட்டமும் 15/20 நிமிடங்கள் என்ற நேரத்தில் 5 முதல் 7 சுற்றுகள் வரை பங்கேற்பாளர்கள் போட்டியில் பங்கெடுத்தனர்.
இப்போட்டிக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஆதரவு கிடைத்து வருவது குறித்து ஏற்பாட்டளர்கள் வணக்கம் மலேசியாவிடம் மகிழ்ச்சித் தெரிவித்தனர்.
இந்த சதுரங்கப் போட்டி பிள்ளைகளின் மூளைக்கு வேலைக் கொடுப்பதாக பெற்றோர்கள் சிலர் தெரிவித்தனர்.
மாணவர் பருவத்திலேயே சதுரங்கப் போட்டியை அறிமுகம் செய்து, இளம் வயதினர் தங்களின் திறமையை வெளிக்காட்டவும், விளையாட்டு உணர்வை வளர்த்துக் கொள்வதையும் இப்போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது.