
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-19- எம். இந்திரா காந்தியின் மகள் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதில் போலீசுக்கு பெரியத் தடங்கல் எதுவும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என, நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுமன் துவான் மாட் கூறுகிறார்.
இதை விட பெரிய பெரிய வழக்குகளை எல்லாம் போலீஸார் மிகத் திறமையாகக் கையாண்டுள்ளதை, கோலாலாம்பூரில் Allianz Centre for Governance நிகழ்வில் பேசிய போது அவர் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக, 2013-ல் பெண் தொழில் அதிபர் சோசிலாவாத்தி லாவியா (Sosilawati Lawiya) மற்றும் இதர மூவரின் படுகொலை, 2006-ஆம் ஆண்டு மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு (Altantuya Shaariibu) வழக்குகளில் குற்றவாளிகளை போலீஸ் சாமர்த்தியமாகக் கண்டுபிடித்தது.
அவர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டனர். எனவே, இந்திரா காந்தி விஷயத்தில் அவரின் மகளைத் தேடிக் கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமாக இருக்காது என்பதே தனிப்பட்ட முறையில் தமது கருத்து என தெங்கு மைமுன் சொன்னார்.
ஆனால், என்ன காரணத்தாலோ இந்திராவின் மகளை இன்னும் கண்டுபிடித்து தாயுடன் சேர்க்க முடியாமலிருப்பதாக அவர் கூறினார்.
முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான இந்திரா காந்தியின், மதம் மாறிய கணவர் Muhammad Riduan Abdullah, 2009-ல் 11 மாத குழந்தையாக இருந்த அவர்களின் பெண் பிள்ளையைக் கடத்திச் சென்றார்.
பின்னர், Tevin Darsiny, Karan Dinish, Prasana Diksa ஆகிய மூன்று பிள்ளைகளையும் தாய்க்குத் தெரியாமலயே அவர் இஸ்லாத்துக்கு மதம் மாற்றினார்.
அன்றிலிருந்து அந்தக் கடைசிப் பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்க இந்திரா காந்தி சட்டப் போராட்டம் நடத்துகிறார்.