
மலாக்கா, ஆகஸ்ட்-18 – மலாக்கா, Krubong தொழிற்பேட்டையில் ஒரு நாய் உயிருடன் பாதியாகத் தோலுரிக்கப்பட்டதாகக் கூறி, விலங்குகள் நல அமைப்பொன்று போலீஸில் புகார் செய்துள்ளது.
மலாக்கா தெங்கா போலீஸ் தலைவர் Christopher Patit அதனை உறுதிப்படுத்தினார்.
உயிருடன் தோலுரிக்கப்பட்டதில் உடம்பிலும் கழுத்திலும் கடுமையான காயங்களுடன் அந்நாய் கண்டெடுக்கப்பட்டது.
வழக்கமாக தெரு நாய்களுக்கு உணவளிக்கும் ஒரு நல்லுள்ளத்தின் கண்ணில் அந்நாய் பட, அவர் கால்நடை மருத்துவரிடம் அதனைக் கொண்டுச் சென்றார்.
ஆனால் காயங்கள் படுமோசமாக இருந்ததால், அந்நாய் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிப்பதைத் தடுக்க, கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அது கருணைக் கொலைச் செய்யப்பட்டதாக, Christopher கூறினார்.
எந்தவொரு விலங்குகள் மீதான சித்ரவதையையும் தமது தரப்புக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய Christopher, விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 100,000 ரிங்கிட் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க அச்சட்டம் வகை செய்கிறது.
எனவே, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் முன்வந்து விசரணைக்கு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிகழ்ந்ததாக நம்பப்படும் அச்சம்பவத்தை, இரக்கமற்ற மற்றும் மனிதாபிமானமற்றச் செயல் என கைவிடப்பட்ட விலங்குகளுக்கான மலேசியச் சங்கம் SAFM-மின் தலைவர் R. கலைவாணன் முன்னதாக சாடியிருந்தார்.
விலங்குகளை துன்புறுத்தும் செயல்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கலைவாணன் வலியுறுத்தினார்.
இது சித்ரவதை என்பது தெளிவாகத் தெரிகிறது; எனவே குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.