
ஜோர்ஜ் டவுன், நவ 18 – வழங்கப்படும் நிதியுதவியை தமிழ்ப் பள்ளிகள் விவேகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பல பள்ளிகள் மிகவும் பின்தங்கியுள்ளதால் அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி தேவைப்படுவதாக செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்தின் நலனுக்காக, குறிப்பாக கல்வியில், நிதி மற்றும் நன்கொடைகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும். அதே வேளையில் பணத்தை விரயமாக்குவதை தவிர்க்கவும் சமூகத் தலைவர்கள முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அறிவு, கட்டொழுங்கு , பொறுப்பான நடவடிக்கை மற்றும் தொடர்ச்சியான முயற்சி மூலம் சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றுவதே எங்களது குறிக்கோள் என பினாங்கு குஜராத்தி சமாஜ் அமைப்பு ஏற்பாடு செய்த தீபாவளி சமூக நல உதவி திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
பினாங்கு குஜராத்தி சமாஜ் அமைப்பு மேற்கொண்டுவரும் செயல் திட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்ட அவர் , வருடாந்திர உதவி மற்றும் பண்டிகை நன்கொடைகள் முக்கியமானவை என்றாலும், சமூகங்கள் தற்காலிக உதவியை மட்டுமே நம்பியிருக்க முடியாது.
சரியான கல்வி, திறன் மேம்பாடு, நிதி திட்டமிடல் மற்றும் மனநிலை மாற்றம் மூலம் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட சமூகத்தை நோக்கி நகர வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார்.



