
நியூயார்க், ஜூலை 29- நியூ யார்க்கில் உயரமான Midtown Manhattan அலுவலக கட்டிடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நியூ யார்க் நகரின் போலீஸ் அதிகாரி உட்பட நால்வர் கொல்லப்பட்டனர். திங்கட்கிழமை மாலை அலுவலக கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் நடந்து சென்ற ஆடவன் , பின்னர் அந்த அலுவலக கட்டிடத்தின் தரைப்பகுதியிலும் மேல் மாடியிலும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் அந்த நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். அதிக மக்கள் தொகை கொண்ட அமெரிக்க நகரத்தின் மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒருவன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளான்.
இதற்கு முன் , சந்தேக நபரான 27 வயதான ஷேன் டெவோன் தமுரா, ( Shane Devan Tamura ) லாஸ் வெகாஸைச் சேர்ந்தவன் என்று போலீசார் கூறியபோதிலும் அவன் இந்த தாக்குதலை நடத்தியதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. எனினும் அவன் மனைநிலை பாதிக்கப்பட்ட மருத்துவ பின்னணியை கொண்டிருந்தவன் என கூறப்பட்டது.
இந்த சம்பவம் நடந்தபோது கட்டிடத்தின் பாதுகாவராக பணியாற்றிய நியூயார்க் நகர் அதிகாரி டிடருல் இஸ்லாம் ( Didarul Islam ) மரணம் அடைந்தார். இறந்த மூவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சந்தேக நபர் தேசிய கால்பந்து லீக் (NFL) மற்றும் முதலீட்டு மேலாண்மை நிறுவனமான பிளாக்ஸ்டோன் உள்ளிட்ட வணிகங்களைக் கொண்ட 345 பார்க் அவென்யூவில் உள்ள கட்டிடத்திற்குள் நுழைந்து உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நியூயார்க் நகர போலீஸ் கமிஷனர் ஜெசிகா டிஷ் ( Jessica Tisch ) கூறினார்.