
ரோம், நவம்பர்-11 – இத்தாலியின் ரோம் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே சீனாவின் Hainan விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த போயிங் 787-9 விமானத்தின் வலது இயந்திரத்தில் தீ ஏற்பட்டது.
இதனால் 249 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களுடன் சீனாவின் Shenzhen நகருக்குச் செல்ல வேண்டிய விமானம், எரிபொருளை கடலில் கொட்டி விட்டு, ரோமுக்கே திரும்பி பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானத்திலிருந்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
அச்சம்பவத்தால் விமான நிலைய வான் போக்குவரத்தில் தாமதம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தின் இயந்திரத்தை பறவை மோதியிருக்கலாம் என நம்பப்படுவதாக இத்தாலிய விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
நடுவானில் பறவைகள் விமானங்களில் மோதுவது வழக்கம் தான் என்றாலும், விமானத்தின் பாதுகாப்புக்கு அது பெரும் பாதிப்பாக அமையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.