
புத்ராஜெயா, ஆகஸ்ட்-29 – நிலநடுக்கம் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வீடுகள் பாதுகாப்பாக கட்டப்படுவதை உறுதிச் செய்வதற்கு, 2025 நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா அவசியம் என்கிறார், வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்.
அண்மைய காலமாக பல பகுதிகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகஸ்ட் 24, 27, 28 ஆகிய தேதிகளில் ஜோகூர், செகாமாட்டில் 4 முறை நில நடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து, வரக்கூடிய அபாயத்தை மலேசியா இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார் அவர்.
2016 முதல், அனைத்து புதிய கட்டடங்களும் மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியமான CIDB-யின் பாதுகாப்புத் தரங்களுக்கு கட்டுப்பட வேண்டும்; இதில் ரிக்டர் அளவுகோலில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட நிலநடுக்கங்களைத் தாங்கும் திறன் அடங்கும் என்று கோர் மிங் விளக்கினார்.
இருப்பினும், அதற்கு முன்பு கட்டப்பட்ட பல கட்டடங்கள் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்புத் தரங்களை பூர்த்திச் செய்யவில்லை என்றும், நிலநடுக்கம் ஏற்பட்டால் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
“எனவே தான் நமக்கு இந்த மசோதா தேவை. பொது பாதுகாப்பே அரசாங்கத்தின் முன்னுரிமை. இந்த விஷயத்தில், எந்த சமரசமும் இல்லை” என ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
நேற்று மக்களவையில் அம்மசோதா இரண்டாவது வாசிப்புக்கு விடப்பட்டாலும், அதன் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
ஆளுங்கட்சி – எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது சமூக அமைப்புகளிடமிருந்து
ஆட்சேபனைகளைப் பெற்றதால் அம்முடிவு எடுக்கப்பட்டது.
எதிர்ப்புகளைத் தொடர்ந்து, குறைந்தது 80% உரிமையாளர்களின் ஒப்புதல் தேவைப்படும் வகையால் புதிய ஒப்புதல் வரம்புடன் சட்டம் திருத்தப்படும் என ஙா கோர் மிங் கூறியதாகவும் தெரிய வருகிறது.
முன்னதாக, அம்மசோதா சில வகையான கட்டடங்களுக்கு குறைந்த ஒப்புதல் வரம்பை முன்மொழிந்தது – அதாவது 30 ஆண்டுகளுக்கும் மேலான கட்டடங்களுக்கு 75% மற்றும் கைவிடப்பட்ட அல்லது பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு 51% மட்டுமே…