
லண்டன், மார்ச்-29-மலேசியா, நகர வளர்ச்சி மற்றும் நீடித்த முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், உலப் பிரசித்திப் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் புதிய ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.
அவ்வகையில், வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், மடானி பொருளாதார வடிவமைப்பின் கீழ் மலேசியா–கேம்பிரிட்ஜ் நகர தளத்தை உருவாக்கும் திட்டத்தை வெளியிட்டார்.
இம்முயற்சி, உலகத் தரமான கல்வி நிறுவனங்களை ஒன்றிணைத்து, ஐநா அமைப்பின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை 2030-க்குள் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் அவர்.
கேம்பிரிட்ஜில் நடைபெற்ற நகரத் திட்டமிடல் மாநாட்டில் பேசிய அமைச்சர், மலேசியா நிலைத்தன்மைமிக்க, சகிப்புத்தன்மை கொண்ட மற்றும் உள்ளடக்கமான நகரங்களை உருவாக்கும் கடப்பாட்டை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
மலிவான வீடமைப்பு, பருவநிலை மாற்றத்தை தாங்கும் நகரங்கள், கைவிடப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை மீட்டெடுத்தல் மற்றும் நகர நிர்வாக மேம்பாடு ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தும்.
இந்த ஒத்துழைப்பு, மலேசியா–இங்கிலாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், வெளிநாட்டில் உள்ள மலேசிய மாணவர்கள் தாயகம் திரும்பி தேச நிர்மாணிப்புக்கு பங்களிக்க ஊக்குவிக்கும் என்றும் ஙா கோர் மிங் நம்பிக்கைத் தெரிவித்தார்.



