
டாமான்சாரா, நவம்பர் 19-பெரும் பரபரப்புக்கு இடையில் நேற்றிரவு தான் ஸ்ரீ முஹிடின் யாசின் வீட்டில் கூடிய பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மணிக்கணக்கில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு அந்த முன்னாள் பிரதமரின் தலைமைத்துவத்திற்கு முழு ஆதரவைப் புலப்படுத்தினர்.
கோலாலம்பூர் புக்கிட் டாமான்சாராவில் உள்ள முஹிடின் வீட்டில் 18 பெர்சாத்து எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
முஹிடின் நடுவில் அமர்ந்திருக்க, சுற்றி அமர்ந்திருந்த எம்.பி.கள் “நாங்கள் தலைவரை ஆதரிக்கிறோம்” என முழக்கமிடும் வீடியோ வைரவாகியுள்ளது.
முஹிடின் வலப்பக்கத்தில் துணைத் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடினும், இடப்புறத்தில் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ரட்ஜி ஜிடினும் அமர்ந்திருந்தனர்.
முன்னதாக, ஹம்சாவிடமிருந்து எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பறித்து, ரட்ஜி ஜிடினிடம் ஒப்படைக்கவே அந்த இரகசியக் கூட்டம் நடைபெறுவதாக வதந்தி பரவியது.
அதை எதிர்த்து முஹிடின் வீட்டுக்கு வெளியே சிலர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
எனினும் அப்படி எதுவுமில்லாமல் தலைவருக்கான ஆதரவை மறுஉறுதிப்படுத்தும் கூட்டமாக இது நடைபெற்று முடிந்துள்ளது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த எம்.பிகளில் சிலர், எதிர்கட்சித் தலைவர் பதவி குறித்து எதுவும் பேசப்படவில்லை என உறுதிப்படுத்தியதோடு, சபா தேர்தல் நடைபெறும் இந்நேரத்தில் கட்சி ஒற்றுமையோடு இருக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
தலைவர் பதவியை ஹம்சாவிடம் ஒப்படைத்து விட்டு முஹிடின் ஒதுங்க வேண்டுமென அண்மையக் காலமாக பெர்சாத்துவில் கலகக் குரல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



