
கோலாலம்பூர், ஜனவரி-26 – சட்டத் திட்டங்களையும் நீதித்துறை சுதந்திரத்தையும் நிலைநிறுத்த வேண்டுமென, பதவி விலகிச் செல்லும் நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் வலியுறுத்தியிருப்பதற்கு, மலேசிய வழக்கறிஞர் மன்றம் செவிசாய்க்க வேண்டும்.
அம்மன்றத்தின் 9 முன்னாள் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் அக்கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த 9 பேரில் Zainur Zakaria, Datuk S Ambiga, Ragunath Kesavan, Christopher Leong உள்ளிட்டோரும் அடங்குவர்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கை ஓங்கியிருக்கும் நாடுகளில், நீதித்துறையின் சுதந்திரமே பெரும்பாலும் முதல் பலிகடா ஆவதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.
எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தைக் கட்டிக் காப்பதில் வழக்கறிஞர் மன்றம் தனது பங்கை ஆற்ற வேண்டுமென அந்த கூட்டறிக்கை வலியுறுத்தியது.
2009 நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தின் கீழ் நீதிபதிகள் நியமனத்தில் இடையூறு இருந்ததாக, துன் தெங்கு மைமூன் அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தார்.
அதனைத் தாம் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய அவர், அது விசாரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அது குறித்து கருத்துரைத்த அந்த 9 பேரும், சில ஆண்டுகளாகவே நீதித்துறையில் வெளியாரின் தலையீடு இருப்பது ‘கண்கூடு’ எனக் கூறிக் கொண்டனர்.
நடப்பு அரசாங்கத்தைக் காட்டிலும் முந்தைய 3 அரசாங்கங்கள் நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து நடந்துகொண்டதாக பரவலாகக் கருத்து நிலவுவதாகவும் அவர்கள் கூறினர்.
நீதித்துறை தலையீடுகளால் துரதிர்ஷ்டவசமான கடந்த காலத்திற்கு திரும்புவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல் நாடும் நாட்டு மக்களும் மீண்டும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்குமென அவர்கள் நினைவுறுத்தினர்.