
கோலாலம்பூர், பிப்ரவரி-28 – கோலாலம்பூர், ஜோகூர் பாரு, ஜோர்ஜ்டவுன் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் ‘நெரிசல் கட்டணத்தை’ விதிக்கும் உத்தேச பரிந்துரை ஒரு போதும் போக்குவரத்துப் பிரச்னையைத் தீர்க்க உதவாது.
மேலவை உறுப்பினர் செனட்டர் டத்தோ சி.சிவராஜ் அவ்வாறு கூறியுள்ளார்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள யாரும் வேண்டிக் கொள்வதில்லை; வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியத் தேவையின் காரணமாகவே நெரிசலுடன் அவர்கள் போராட வேண்டியுள்ளது.
நம்பகமான மாற்று வழி இருந்தால் அவர்கள் ஏன் நெரிசலில் சிக்கித் தவிக்கப் போகிறார்கள் என சிவராஜ் கேள்வி எழுப்பினார்.
பல நாடுகளில் அமுலில் உள்ளது போல் மலேசியாவிலும் ‘நெரிசல் கட்டணத்தை’ கொண்டு வந்தால் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை 20 விழுக்காடு குறைக்க முடியுமென, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா நேற்று மக்களவையில் கூறியிருந்தார்.
முக்கிய நகரங்களில் குறிப்பிட்ட பாதைகளைப் பயன்படுத்த வாகனமோட்டிகளுக்கு ‘நெரிசல் கட்டணம்’ விதித்தால், பலர் அப்பாதைகளைப் பயன்படுத்த தயங்குவர்; இதன் மூலம் நெரிசலைக் குறைப்பதே நோக்கமாகும்
ஆனால், அத்தகையை முன்னெடுப்புகள் லண்டன், சிங்கப்பூர் போன்ற உலகத் தரத்திலான பொது போக்குவரத்து முறைகளைக் கொண்டிருக்கும் மாநகரங்களுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம்.
பொது போக்குவரத்துகள் இன்னமும் ‘பலவீனமாகவே’ காணப்படும் மலேசியாவுக்கு ஒத்து வராது என சிவராஜ் சொன்னார்.
அதையும் மீறி ‘நெரிசல் கட்டணத்தை’ விதித்தால், ஏற்கனவே வாழ்க்கைச் செலவினத்துடன் போராடி வரும் பெருவாரியான மலேசிய மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமமாகும்.
அப்புதியக் கட்டண விதிப்பு, e-hailing, p-hailing சேவைக் கட்டண உயர்வுக்கும் வித்திட்டு பயனீட்டாளர்களின் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்து விடும்.
எனவே, இந்த ‘நெரிசல் கட்டணத்தை மறந்து விட்டு, GST வரியை மீண்டும் அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
அது மக்களின் சுமையைக் குறைக்கும் என்பதோடு, அரசாங்கத்தின் வருமானத்தையும் அதிகரிக்கும் என அறிக்கையொன்றில் சிவராஜ் தெரிவித்தார்.