
சிரம்பான், மார்ச்-13 – வீட்டு மனையின் நிலையை குத்தகையிலிருந்து நிரந்தர உரிமையாக மாற்ற விண்ணப்பிக்காத நெகிரி செம்பிலான் வாசிகள், உடனடியாக அவ்வாறு செய்யுமாறு மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது வீட்டு உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மிகவும் மெதுவாகவே பெறப்படுவதாக, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் கூறினார்.
விண்ணப்பிப்பதற்கான காலவரையறை எதனையும் நிர்ணயிக்க நாங்கள் விரும்பவில்லை;
ஆனால் என்றாவது ஒருநாள் இத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டால், உரிமையை மாற்றாதவர்களுக்கு பிரச்னையாகி விடுமென அவர் நினைவுறுத்தினார்.
இத்திட்டம் இப்போது இரண்டாவது தவணையில் உள்ளது; மூன்றாவது தவணை வரும் போது நிறுத்தப்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, வீட்டு உரிமையாளர்கள் காலம் தாழ்த்தாமல் தத்தம் மாவட்டங்களில் உள்ள நில மற்றும் மாவட்ட அலுவலங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் செய்யுமாறு டத்தோ ஸ்ரீ அமினுடின் கேட்டுக் கொண்டார்.
எனினும் அசல் உரிமையாளர்கள் மட்டுமே அதற்கு விண்ணப்பிக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
நெகிரி செம்பிலானில் குத்தகை அந்தஸ்திலிருக்கும் நிலப் பட்டாக்களை நிரந்தர உரிமைக்கு மாற்றும் திட்டத்தை மேலும் ஏராளமான தகுதிப் பெற்ற வீடமைப்புத் திட்டங்களுக்கு விரிவுப்படுத்துவது, பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதியாகும்.