
திருவண்ணாமலை, டிசம்பர்-2 – தமிழகத்தின் திருவண்ணாமலையில் கனமழையின் போது 3 வீடுகள் மீது பாறைகள் சரிந்து விழுந்ததில், 7 பேரின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.
திருவண்ணாமலை கோவில் பின்புறம் மலை அடிவாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
மண் அரிப்பைத் தொடர்ந்து திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் வீடுகள் தரைமட்டமாகி, கணவன்-மனைவி, 5 சிறார்கள் ஆகியோர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
இரவு நேரத்தில் போதிய மின் விளக்கு வசதி இல்லாத காரணத்தால் தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணி நேற்று மாலை நிறுத்தப்பட்டது.
அதோடு பாறைகளை அகற்றினால் மேலும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்று வட்டாரத்திலிருந்தவர்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை வரவழைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வந்த பிறகே அந்த 7 பேரின் நிலை குறித்து தெரியவருமென கூறப்படுகிறது.
ஃபென்ஞல் புயல் காரணமாக சனிக்கிழமை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் அடைமழைப் பெய்ததால் சாலைகள், கால்வாய்கள், குளங்கள், ஏரிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றதை காண முடிந்ததாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.