
செர்டாங், பிப்ரவரி-27 – காதலை ஏற்க மறுத்ததால் பெண்ணைத் தாக்கிய ஆடவனை செர்டாங் போலீஸ் தேடி வருகின்றது.
பாதுகாவலராக பணிபுரியும் 32 வயது அந்த உள்ளூர் பெண், நேற்று பிற்பகல் வாக்கில் அது குறித்து புகார் அளித்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏ. அன்பழகன் தெரிவித்தார்.
பிப்ரவரி 25-ஆம் தேதியன்று பூச்சோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்புச் சாவடியில், பெண் பாதுகாவலரை ஒரு நபர் தாக்கும் வீடியோ முன்னதாக facebook-கில் வைரலானது.
அப்பெண்ணுக்கு அறிமுகமான அவ்வாடவர் சம்பவத்தின் போது அவரை நெருங்கி காதலிப்பதாகக் கூறியுள்ளார்; அப்பெண் அதனை நிராகரிக்கவே கோபமடைந்த அந்நபர், மடக்கும் கத்தியால் அப்பெண்ணின் கழுத்தில் தாக்கப் பாய்ந்துள்ளார்.
நல்லவேளையாக அதை அப்பெண் தடுத்து விட்டார்; என்ற போதும் பின்னர் அதிகாலை 3.30 மணியளவில் அதே ஆடவர் திரும்ப வந்து அப்பெண்ணின் தலையில் அடித்தும், கழுத்தை நெரித்தும் உடல் ரீதியாகத் தாக்கினார்.
பாதிக்கப்பட்டவரின் சகா தலையிட்டு தாக்குதல் மோசமாவதை தடுத்தது வீடியோவில் தெரிகிறது.
சம்பவத்தின் போது அப்பெண்ணுக்கு அவ்வாடவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அன்பழகன் கூறினார்.
இதையடுத்து சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைதுச் செய்ய போலீஸார் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.