
சிரம்பன், அக்டோபர்- 8,
நெகிரி செம்பிலான் தீவி ஜெயா ( Thivy Jaya ) விளையாட்டு மன்றத்தின் தலைவரும் ,மாநில காற்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமான காளிதாசன் சின்னையா தலைமையில் அண்மையில் நெகிரி செம்பிலான் தமிழ்ப் பள்ளிகளுக்கான காற்பந்து போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவாக நடத்தப்பட்ட இப்போட்டியில் மாணவர் பிரிவில் முதல் இடத்தில் நீலாய் தமிழ்ப்பள்ளி வெற்றியாளராக வாகைசூடியதன் மூலம் சுழல் கிண்ணத்தையும் 200 ரிங்கிட் பரிசுத் தொகையும் தட்டிச் சென்றது. 17ஆவது முறையாக நடைபெற்ற இப்போட்டியில் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தையும் லோபாக் தமிழ்ப் பள்ளி மூன்றாவது இடத்தையும் பெற்றன.
மகளிர் பிரிவில் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி மாணவிகள் குழு வெற்றியாளர் பட்டத்தை வென்று 200 ரிங்கிட் ரொக்கம் மற்றும் சவால் கிண்ணத்தை தட்டிச் சென்றது. லாடாங் சிரம்பான் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தையும் , கிம்மாஸ் தமிழ்ப் பள்ளி மூன்றாவது இடத்தையும் பெற்றன.
இப்போட்டியை ம.இ.காவின் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ தினாளன் ராஜகோபாலு, நெகிரி செம்பிலான் காற்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தனபாலன், மிபா செயலாளர் தினேஸ், நெகிரி செம்பிலான் ம.இ.கா விளையாட்டுப் பிரிவின் தலைவர் ரமனி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர். இப்போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவும் வகையில் டத்தோ தினாளன் 4,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கினார். இப்போட்டியை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் நிறைவு செய்து வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கினார். மம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் யாப் யூ வெங், முன்னாள் தீவி ஜெயா காற்பந்து கிளப்பின் விளையாட்டாளர்களான கிருஷ்ணன், சுரேஷ் சோனோ, ரவிச்சந்திரன் மற்றும் சரவணன் மற்றும் மாரியப்பன். ஆகியோரும் நிறைவு விழாவில் கலந்துகொண்டனர். ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் 5 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்கினார். இப்போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவிய அனைவருக்கும் காளிதாசன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.