
சிரம்பான் , செப் -30,
நெகிரி செம்பிலான் மாநில வியூக தூய்மை நகர் 2025 – 2030 திட்டத்தை வரைவதற்கு SWCorp Negeri Sembilan முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த முயற்சி, காகிதத்தில் மட்டுமல்ல, நெகிரி செம்பிலான் மக்களின் அன்றாட வாழ்வில் தூய்மைக்கு முன்னுரிமை வழங்கும் , பிரதான கலாச்சாராமாக மாற்றுவதற்கு SWCorp இன் உறுதிப்பாட்டிற்கு சான்றாகும் என அந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்து உரையாற்றியபோது மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன் தெரிவித்தார். சட்டம் 672 – திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனமாக SWCorp ஒரு பெரிய நம்பிக்கையை கொண்டிருக்கிறது.
SWCorp இன் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை மாநில அரசு அங்கீகரிக்கிறது. இருப்பினும், இந்தத் திட்டத்தை SWCorp மட்டும் ஏற்றுக்கொண்டால் அது வெற்றிகரமாக இருக்காது. உள்ளூர் அதிகாரிகள், பொதுப்பணித் துறை, சுற்றுச்சூழல் துறை, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, அரசு சாரா நிறுவனங்கள், தனியார் துறை, உள்ளூர் சமூகங்கள் மற்றும் இந்த மாநிலத்தின் குடிமக்கள் என தனிநபர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்தும் இதற்கு வலுவான ஆதரவு தேவைப்படுகிறது. தூய்மை என்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு. இது அமலாக்கத்தின் செயல்திறனை மட்டுமல்ல, சமூகத்தின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டையும் சார்ந்துள்ளது என அருள்குமார் சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டம் ஒரு விரிவான தூய்மை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முடியும். நெகிரி செம்பிலான் மக்கள் சுத்தமான மற்றும் அழகான சூழலில் வாழ்வது மட்டுமல்லாமல், தங்கள் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதில் அதிக விழிப்புணர்வு மற்றும் பெருமை உணர்வையும் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் கூறினார்.