
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-17, பினாங்கு மண்ணின் மைந்தரும் நாட்டின் ஐந்தாவது பிரதமருமான மறைந்த துன் அப்துல்லா அஹ்மாட் படாவிக்கு மரியாதை செலுத்த மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
அதற்காக மாநில ம.இ.கா சார்பில் அதன் தலைவர் டத்தோ ஜே.தினகரன்,
பினாங்கு முதல்வர் Chow Kon Yeow-வுக்கு நன்றித் தெரிவித்துள்ளார்.
Bandar Cassia நெடுஞ்சாலை ‘பத்து காவான், ஜாலான் துன் அப்துல்லா’ என பெயர் மாற்றப்படுவதாக முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதோடு நாளை வெள்ளிக்கிழமை பினாங்கில் அனைத்து அரசாங்கக் கட்டங்களிலும் மாநிலக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களால் பாசமாக ‘பாக் லா’ என அழைக்கப்படும் துன் அப்துல்லாவுக்கு இந்த அங்கீகாரம் சாலப் பொருந்தும்.
தேசிய முன்னணி காலத்தில் கெப்பாளா பத்தாஸ் தொகுதி மட்டுமின்றி பினாங்கு மக்களுக்கே அவர் நற்சேவையாற்றியுள்ளார்.
அடிப்படை வசதி முதல் கல்வி மேம்பாடு வரை ‘பாக் லாவின்’ சேவைகள் அளப்பரியது.
அவை அனைத்தும் பினாங்கு மக்களால் காலத்திற்கும் நினைவுக் கூறப்படும்.
அந்தப் பெருந்தலைவருக்கு மாநில அரசு செலுத்தும் மரியாதையை இது புலப்படுத்துகிறது.
அதற்காக முதல் அமைச்சருக்கும் மாநில அரசுக்கும் பினாங்கு ம.இ.கா மீண்டும் நன்றித் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ தினகரன் சொன்னார்.
துன் அப்துல்லா அஹ்மாட் படாவி தனது 85-ஆவது வயதில் திங்கட்கிழமை காலமானார்.