
கோலாலம்பூர், டிசம்பர் 4 – மீபா ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக களம் காணவுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டிக்கு, ம.இ.காவின் தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு லட்சம் ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதனை ம.இ.காவின் விளையாட்டுப் பிரிவு தலைவர் அன்ட்ரு டேவிட் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர் கால்பந்து சங்கமான மீபா ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தேசிய கால்பந்து போட்டி எதிர்வரும் டிசம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் பினாங்கு யூ.எஸ்.எம் கோப்பா அரேனா (USM, Kopa Arena) திடலில் நடைபெறவிருக்கிறது.
இதற்கு ம.இ.கா பக்க பலமாக இருந்து துணைபுரியும் என ம.இ.காவின் உச்சமன்ற உறுப்பினருமான அன்ட்ரு டேவிட் கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் கால்பந்து போட்டியை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டியை நடத்தி வருவதாக மீபாவின் தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.
இதனிடையே, இவ்வாண்டு ம.இ.காவுடன் கைகோர்த்து எம்.ஐ.இடி (MIED) மற்றும் பெர்ஜெய குருப் (Berjaya Group) ஆதரவுடன் இணைந்து போட்டியை நடத்துவதாக அவர் கூறினார்.
இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என 80 குழுக்கள் பங்கேற்கவுள்ளதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் அன்பானந்தன் தெரிவித்தார்.
இப்போட்டியில், மாணவர்கள் பிரிவில் வெற்றி பெரும் குழுவுக்கு டத்தோ என்.எஸ்.மணியம் கிண்ணமும், மாணவிகள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு அன்னை மங்களம் கிண்ணமும் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.