
செமஞே, மார்ச்-11 – நோன்புப் பெருநாளுக்கு 4 நாட்களுக்கு நெடுஞ்சாலைகளில் பயணிக்க சரக்கு வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
ஹரி ராயாவுக்கு முன்பு மார்ச் 29, 30-ஆம் தேதிகளிலும் பின்னர் ஏப்ரல் 5, 6-ஆம் தேதிகளிலும் அத்தடை அமுலில் இருக்குமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
பெருநாளுக்கு சொந்த ஊர்களுக்குத் திரும்பும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை நெடுஞ்சாலைகளில் கணிசமாக உயரும் என்பதாலும், சாலை விபத்தைக் குறைக்கும் நோக்கிலும் இத்தடை விதிக்கப்படுகிறது.
அதனை முறையாகப் பின்பற்றுமாறு அனைத்து சரக்கு வாகன நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
தடையை மீறினால் 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.
அதிகபட்ச தண்டனையாக 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றார் அவர்.
அண்மைய சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அமுலாக்க நடவடிக்கைகள் வாயிலாக, சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இவ்வாண்டு 10 விழுக்காடுக் குறைந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நோன்புப் பெருநாளின் போதும் அது தொடர ஏதுவாக, மார்ச் 24 முதல் ஏப்ரல் 8 வரை நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.