
கோலாலம்பூர், ஆக 31 – நாட்டில் அதிகரித்துவரும் பகடிவதையினால் பாதிக்கப்படுவோருக்கு நீதி கிடைப்பதற்கும் , இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பகடிவதை வேண்டாம் என்ற தலைப்பிலான பிரச்சாரத்தை ம.இ.கா தேசிய இளைஞர் பகுதி தொடங்கியுள்ளது.
பகடி வதையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
பகடிவதையினால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சத்தினால் அல்லது நம்பிக்கையின்மை காரணமாக அமைதியாக இருப்பதால் இந்த விவகாரத்தை தீர்ப்பது கடினம் என ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவரான அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.
மௌனம் சட்டப்பூர்வமாகத் தவறாகக் கருதப்படலாம் என்றும், இதுபோன்ற சம்பவங்களை புகார் செய்வது அனைவரின் பொறுப்பு என்று இன்று வணக்கம் மலேசியாவிடம் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே பகடி வதையில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் போலீசிற்கு தகவல் வழங்க வேண்டும் என்பதோடு போலீசிற்கு சாட்சியம் வழங்குவதற்கும் அவர்கள் முன்வர வேண்டுமென அர்விந்த் கேட்டுக் கொண்டார்.
எதிர்காலத்தில் பகடிவதை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பொதுமக்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியது அவசியம்.
அதே வேளையில் பகடிவதையினால் பாதிக்கப்படுவோருக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையிலும் போலீஸ் தீவிர முனைப்பு காட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.