Latestமலேசியா

பட்ஜெட் 2026: மக்கள் நலனை வலுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சிடம் 13 பரிந்துரைகளை முன்வைக்கும் KPKT

புத்ராஜெயா, செப்டம்பர்-4- 2026 பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்ளப்பட ஏதுவாக, வீடமைப்புப் – ஊராட்சித் துறை அமைச்சான KPKT, இன்று நிதி அமைச்சிடம் 13 முக்கியப் பரிந்துரைகள் அடங்கியப் பட்டியலைச் சமர்ப்பித்தது.

பல்லின மக்கள் வாழும் நாடாளுமன்றத் தொகுதிகளில் முஸ்லீம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்க, Madani Harmoni திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்குவது.

சீனர் புது கிராமங்கள் மற்றும் இந்தியர் கிராமங்களில் அடிப்படை வசதிக் கட்டமைப்பை மேம்படுத்தவும், அழகுப்படுத்தவும், ‘ஒரு கிராமம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தை செயல்படுத்தவும் 150 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு கோருவதும் அவற்றிலடங்கும்.

இத்திட்டங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ங்கா கோர் மிங், இதன் மூலம் மலேசியா மடானி கொள்கையின் அபிலாஷைகளை விரைந்து அடைய முடியுமென்றார்.

இது தவிர்த்து, Kesejahteraan Madani திட்டத்தின் கீழ் அடுத்தாண்டு நெடுகிலும் 10,000 அடிப்படை வசதித் திட்டங்களை மேற்கொள்ள 1 பில்லியன் ரிங்கிட் நிதி கோரப்படும்; தாமான் மடானி, பொதுச் சந்தைகள், சமூக மண்டபங்கள், வீடமைப்புப் பகுதிகளில் வடிவால் திட்டங்கள், சூரிய சக்தியில் எரியும் சாலை விளக்குகளைப் பொருத்துவது போன்ற நோக்கங்களுக்கு அந்நிதி பயன்படுத்தப்படும்.

அதோடு, Rumah Kasih Madani திட்டம் வாயிலாக, சேதமடைந்த பழைய வீடுகளை பழுதுபார்க்கவும் புதிதாகக் கட்டித் தரவும் 200 மில்லியன் ரிங்கிட் நிதியை KPKT எதிர்பார்க்கிறது.

நகரப்புற ஏழை மக்கள் மேலும் வசதியாகவும் பாதுகாப்புடனும் வாழ இது அவசியமென, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசானுடனான இன்றைய சந்திப்பில் ங்கா கோர் மிங் சொன்னார்.

பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அக்டோபர் 10-ஆம் தேதி 2026 பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!