பட்டர்வெர்த், நவ 7- பட்டர்வெர்த் தாமான் பண்டானிலுள்ள ஒரு வீட்டில் சூதாட்ட கடன் தொகையை திரும்பத் செலுத்தத் தவறிய நபரை மிரட்டியதோடு துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பில் இரு சகோதரர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து 43 முதல் 53 வயதுடைய அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் தனித்தனியாக பட்டர்வெர்த் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக பினாங்கு குற்றவியல் விசாரணைத் துறையின் தலைவர் Zailanni Amit தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் சூதாட்டம் விளையாடியபோது தான்
கொடுக்க வேண்டிய 23,000 ரிங்கிட் கடனை வசூலிக்க அவர்கள் தனது வீட்டிற்கு வந்ததாக புகார்தாரர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அந்த கும்பலைச் சேர்ந்தவர்களில் ஒருவன் இரு முறை வீட்டின் சுவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியபோதிலும் புகார்தாரர் காயம் அடையவில்லை.
இதனிடையே கைது செய்யப்படட நபர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் நான்கு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜைலானி கூறினார்.