
சைபர்ஜெயா, ஜனவரி-20 – பண்ணிசைப் பாடசாலை நடத்திய “தமிழிசை @ பயணம் ‘25” மாணவர் அரங்கிசை மற்றும் 2-ஆவது பட்டமளிப்பு விழா, ஞாயிறன்று சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பாடசாலை, தற்போது 300 மாணவர்களுக்கு திருமுறைப் பண்ணிசை போதனை செய்து வருகிறது.
அவ்வகையில் 12 திருமுறைகள் மற்றும் 24 தேவாரப்பண்கள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம், 4 ஆண்டுகள் பயின்று, 3 நிலை சான்றிதழ் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
இவ்வாண்டு 16 மாணவர்கள் பட்டம் பெற்றதுடன், 150 மாணவர்கள் சான்றிதழ் பெற்றனர்.
விழாவில், சைபர்ஜெயா பல்கலைக் கழகத்தின் இணை வேந்தர் தான் ஸ்ரீ Dr பாலன், மற்றும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
“ பண்ணிசைப் பாடசாலை – திருமுறைப் பண்ணிசையை முறையான கல்வியாக உயர்த்தும் முன்னோடி” என பண்ணிசை பாடசாலை ஆலோசகர் டத்தோ CM விக்னேஸ்வரன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இதுபோன்ற சமய வளர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் பெருமையடைவதாக, தான் ஸ்ரீ பாலர் தெரிவித்தார்.
பொதுவாக, திருமுறை வகுப்புகள் சமய வழிபாடுகளுக்குள் மட்டுமே நடத்திவருகின்றன.
ஆனால், திருமுறைப் பண்ணிசை போதனையின் தரத்தை உயர்த்தும் நோக்கில், பண்ணிசைப் பாடசாலை, பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு வாயிலாக, பண்ணிசையை முறையான கற்றல் கற்பித்தல் மூலம் கற்பித்து, ஒரு பள்ளியாக இயங்கி வருகின்றது.
இதன் மூலம், தகுதி பெற்ற திருமுறை ஆசிரியர்களையும் உருவாக்குகின்றது.



