பதவிகளை விட சுயமரியாதையயே முக்கியம்: தைரியமான முடிவை ஆமோதிக்கும் ம.இ.கா பேராளர்கள்

ஷா ஆலாம், நவம்பர் 17- எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகளுடன், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ம.இ.காவின் 79-ஆவது தேசியப் பொதுப் பேரவை நடந்து முடிந்துள்ளது.
சிலாங்கூர், ஷா ஆலாம், IDCC மாநாட்டு மையத்தில், நாடு முழுவதுமிருந்து வந்திருந்த 1,808 பேராளர்களுடன் ஒரு நாள் மாநாடாக இது நடைபெற்றது.
பலரும் எதிர்பார்த்தபடியே, தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து ம.இ.கா வெளியேறி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைய அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, பேராளர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் முதுபெரும் கட்சியாகவும், தேசிய முன்னணியின் 79 ஆண்டு கால முக்கியப் பங்காளியாகவும் உள்ள ம.இ.கா, இதுவரை எடுத்த மிக தைரியமான முடிவாக இது பார்க்கப்படுகிறது.
பதவி பட்டங்களை விட சுயமரியாதையும் தன்மானமுமே கட்சிக்கு முக்கியம் என்பதை தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் தனது கொள்கையுரையில் வலியுறுத்தியிருந்தார்.
ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்கள் மற்றும் பேராளர்களும் அதே உணர்வை, வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
தேசிய முன்னணியிலிருந்து வெளியேறும் தீர்மானம் பொதுப் பேரவையில் நிறைவேறியிருந்தாலும், இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை பேராளர்கள் தேசியத் தலைவர் மற்றும் மத்திய செயலவையிடம் கொடுத்துள்ளனர்.
ஆக, அடுத்த மத்திய செயலவைக் கூட்டத்திலேயே ம.இ.காவின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவெடுக்கப்படுமென, துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
முடிவு எதுவாக இருந்தாலும், பொதுப் பேரவையில் நிகழ்ந்த நேற்றைய சம்பவமானது, ம.இ.கா பத்தோடு பதினொன்றாக ஆமாம் சாமி போடும் பங்காளி கட்சி அல்ல என்பதையும், தனக்கும் சுய கௌரவம் உண்டு என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது…



