
கோலாலம்பூர், மார்ச் 19 – பதிவு செய்யப்படாத காண்டாக்ட் லென்ஸ்களை சில்லறை விற்பனையாளர்களுக்குத் தெரிந்தே விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு எதிராக , மருத்துவ சாதன ஆணையம் கடுமையான அமலாக்க நடவடிக்கையை எடுக்கவிருக்கிறது.
மார்ச் 16 ஆம் தேதியன்று பசாரியா வங்சா மாஜூவில் மலேசிய ஒளியியல் மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத தயாரிப்புகள் உட்பட, மருந்துச் சீட்டு இல்லாமல் காண்டாக்ட் லென்ஸ்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து ஆங்கில தினசரி வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மூன்று மணி நேர அதிரடிச் சோதனையில், மூன்று அமலாக்கக் குழுக்கள் 19 வளாகங்களில் சோதனை நடத்தியதோடு . சில்லறை விற்பனையாளர்களின் கையிருப்பு எங்கிருந்து வருகிறது என்பதையும் அவர்கள் விசாரித்தனர்.
சில வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை உள்ளூர் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து கொள்முதல் செய்துகொண்டிருக்க, மற்றவர்கள் அவற்றை தாய்லாந்து மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்தனர் அல்லது இணையம் வழியாக வாங்கினர்.
காண்டாக்ட் லென்ஸ்களை விற்கும் பல விற்பனை நிலையங்கள், கண்ணாடிக் கடைகளாகச் செயல்படாமல், உணவு, பொதுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட அணிகலன்களுக்காக வழங்கப்பட்ட வணிக உரிமங்களின் கீழ் இயங்கி வந்ததும் கண்டறியப்பட்டது.



