பத்தாம் தீவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற பெர்ரி ரசாயன டேங்கரில் மோதியது

சிங்கப்பூர், நவ 11 – இந்தோனேசியாவின் பத்தாம் தீவிலிருந்து திங்கட்கிழமை, 165 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு சிங்கப்பூருக்குச் சென்ற பெர்ரி எனப்படும் பயணப் படகு ஒன்று , சிங்கப்பூர் கடற்பகுதியில் ஒரு ரசாயன டேங்கருடன் மோதியது.
பிற்பகல் மணி 3.30 அளவில் பத்தாமிலிருந்து புறப்பட்ட எம்.வி ஹொரைசன் 9 ( MV Horizon 9) என்ற அந்த பெர்ரி , சிங்கப்பூர் செல்லும் வழியில், மார்ஷல் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட LA Digue என்ற ரசாயன டேங்கரை இரவு 7.30 மணியளவில் மோதியதாக Straits Times செய்தி வெளியிட்டது. பெர்ரியிலிருந்த பயணிகள் , பணியாளர்கள் மட்டுமின்றி ரசாயன டேங்கரின் பணியாளர்களும் பாதுகாப்பாக சிங்கப்பூரின் ஹார்பர்ஃபிரண்ட் முனையத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
மோதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு பெர்ரி திடீரென இடதுபுறமாகத் திரும்பியதாக கூறப்பட்டது. பெர்ரியின் இயந்திரம் நிறுத்தப்பட்டதோடு , டேங்கரின் பக்கவாட்டில் சென்று பின்னர் பெரிய சத்தம் கேட்டதாக பயணி ஒருவர் தெரிவித்தார். இந்த மோதலின்போது பெர்ரி பெரிய அளவில் சேதம் அடையவில்லை.
அதிலிருந்த பயணிகளிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்ட போதிலும் பெர்ரியின் பணியாளர்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தெரிவித்தபின் அந்த பெர்ரி பாதுகாப்பாக HarbourFront முனையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
பெர்ரி ரசாயன டேங்கருடன் மோதியதற்கான காரணத்தைக் கண்டறியவும், சாத்தியமான சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பிடவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



