கோலாலம்பூர், ஜனவரி 25 – உலகப் பிரசித்தி பெற்ற பத்துமலை திருத்தலத்தில் escalator எனும் இயங்கும் மின் படிக்கட்டுகள் அமைக்கப்படும் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது.
திருத்தல அடிவாரத்தில் நடைபெற்ற இந்த பூமி பூஜையை, ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜாவின் துணைவியார் பூவான் ஸ்ரீ மல்லிகா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
எந்த தடையும் இல்லாமல் பணிகள் நடைபெற்றால், 2026ஆம் ஆண்டிற்குள் இயங்கும் மின் படிக்கட்டுகளுக்கான பணி ஓரளவுக்கு முழுமையடைந்து விடும் என டான் ஶ்ரீ நடராஜா நம்பிக்கை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, டான் ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் பூமி பூஜை நடைபெற்ற நிலையில், அவர் செங்கற்களை எடுத்து வழங்க, மஹிமா தலைவரும் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவக்குமார் அடிக்கல் வைத்து புதிய கட்டுமானப் பணியைத் துவக்கி வைத்தார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் ஒத்துழைப்பில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அனுமதிகளுக்கான வேலைகளும் நிலையாக நடைபெற்று வருவதாக டத்தோ சிவக்குமார் கூறினார்.
இந்த இயங்கும் மின் படிக்கட்டுகள் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் மலைக் கோவிலுக்குச் சென்று முருகப் பெருமானை வழங்க ஏதுவாக இருக்கும் என்பது நிச்சயம்.