கோலாலம்பூர்; நவ 30 – எப்போது பத்துமலை முருகன் திருத்தளத்தில் மின்படிக்கட்டும் மற்றும் பல்நோக்கு மண்டபம் வரும் என எங்களை கேட்பதை நிறுத்திவிட்டு; அதற்கான அனுமதியை சிலாங்கூர் அரசாங்கம் எப்போது வழங்கும் என கேள்வி கேளுங்கள். காரணம் மக்களுக்கான அந்த பயனுள்ள வசதிகளை கட்டித்தர நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்; ஆனால் அனுமதிதான் இன்னும் கிடைத்த பாடில்லை என கடுமையாக கூறியுள்ளார் தேவஸ்தான தலைவர் டான் ஶ்ரீ நடராஜா.
இதுகுறித்து சிலாங்கூர் மந்திரி பெசாரிடம் பலமுறை பேசிவிட்டோம் நகராட்சி மன்றத்திடம் விளக்கம் அளித்து விட்டோம், ஆனால் அனுமதி கடிதம் இன்னும் கொடுக்கப்படவில்லை என வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார் நடராஜா.
தைப்பூசத்திற்கு 15 லட்சம் பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் கூடும் பத்துமலையில் அவர்களுக்கான கழிப்பிடம் மற்றும் மேல் குகைக்கும் செல்லும் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டிய கடப்பாட்டை மக்கள் எங்களிடம் எதிர்ப்பார்க்கின்றனர். இல்லாத பட்சத்தில் எங்களிடம் குமுறுகின்றனர். ஆனால் நாங்கள் செய்து கொடுக்க தயார் என்றாலும் அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என மிகுந்த அதிருப்தியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தினார் நடராஜா.