
அம்பாங், டிசம்பர்-2 – அம்பாங்கில் உள்ள சூப்பர் மார்கெட்டிலிருந்து Public Gold ATM இயந்திரத்தையே களவாடிச் சென்ற மூவர் கும்பலுக்கு, அதில் தங்கக்கட்டி எதுவும் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சியது.
அவர்கள் திருடுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாகத் தான் தங்கக்கட்டிகளை அதிகாரிகள் காலியாக்கியதாக, அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் மொஹமட் அசாம் இஸ்மாயில் (Mohd Azam Ismail) கூறினார்.
நவம்பர் 23-ஆம் தேதி காலையில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அக்கும்பல் ஒரு லாரி ஓட்டுநரை கூலிக்கு வைத்து அந்த ATM இயந்திரத்தைக் கடத்தியிருக்கிறது.
தங்கங்கட்டிகள் இல்லையென்றாலும், ATM இயந்திரம் கொள்ளையிடப்பட்டதில் 60,000 ரிங்கிட் நட்டம் ஏற்பட்டுள்ளது.
துப்புத் துலங்கிய போலீஸ் நவம்பர் 26-ஆம் தேதி கோலாலம்பூரிலும் காஜாங்கிலும் அம்மூவரையும் பிடித்தது.
அவர்களில் 17 வயது இளைஞனும் அடங்குவான்.
மூவரில் ஒருவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்ட வேளை, அவன் ஏற்கனவே 54 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
அவ்வாடவனை 4 நாட்களுக்குத் தடுத்து வைத்துள்ள போலீஸ், மற்ற இருவரையும் உத்தரவாதத்தின் பேரில் விடுவித்தது.