
பத்து மலை, பிப்ரவரி-15 – தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,
இரண்டாவது ஆற்றங்கரையிலிருந்து பத்து மலைக்கு வரும் KTM பாதைகள் மூடப்பட்டதாக, பக்தர்கள் பலர் வீடியோ வாயிலாக அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதனால் அவர்கள் சுற்றி வந்து மேம்பாலத்திலேறி பத்து மலையை வந்தடைய வேண்டியதாயிற்று.
இது குறித்து கருத்துரைத்த கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ என்.சிவகுமார், உண்மையில் அந்த பாதையை மூடுமாறு பத்து மலை நிர்வாகம் KTM-மை கேட்டுக்கொண்டதற்கு காரணமே, அங்கு நெரிசலைத் தவிர்க்கத் தான்.
அதோடு, பால் குடங்கள், காவடிகள் அனைத்தும் பிரதான நுழைவாயில் வழியாக வருவதே சிறப்பாக இருக்குமென்ற நல்லெண்ணத்தில் தான் அவ்வாறுக் கேட்டுக் கொண்டதாக டத்தோ சிவகுமார் தெளிவுப்படுத்தினார்.
என்றாலும், சில தரப்புகள் கேட்டுக் கொண்டதன் பேரில் அவ்வப்போது அப்பாதை திறக்கப்படுவதும் மூடப்படுவதுமாக உள்ளது.
அது சாத்தியமென்றால், பக்தர்களின் வசதிக்காக 3 நாட்கள் மட்டுமின்றி தைப்பூசக் காலம் நெடுகிலும் அதனைத் திறந்து வைக்கலாமே என்றார் அவர்.
இது குறித்து KTM நிர்வாகத்துடன் கூடிய விரைவில் பேசவிருப்பதாக அவர் கூறினார் .