
பட்னா, ஏப்ரல்-25- ஜம்மு – காஷ்மீர் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளும் சதிகாரர்களும் அவர்களின் கற்பனைக்கு எட்டாத தண்டனையை எதிர்கொள்வார்கள்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவ்வாறு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, பயங்கரவாதத்துக்கு எதிரான தனது செய்தியை உலகிற்குத் தெரிவிக்க திடீரென ஆங்லத்தில் பேசி மோடி கவனம் ஈர்த்தார்.
“பயங்கரவாதிகளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் பூமியின் கடைசி மூலை வரை சென்றாவது பிடித்துத் தண்டனை வழங்குவோம்” என மோடி ஆங்கிலத்தில் கர்ஜித்தார்.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நிகழ்ந்துள்ள பயங்கரவாதத்தால் இந்தியாவின் உணர்வு ஒருபோதும் உடையாது; பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது; நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிச் செய்ய ஒட்டுமொத்த தேசமும் உறுதியாக உள்ளது” என பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் பேசினார்.
பயங்கரவாதத் துடைத் தொழிப்பில் மனிதநேயத்தோடு இந்தியாவுக்குத் துணை நிற்கும் உலக நாடுகளுக்கும் அவர் நன்றித் தெரிவித்தார்.
26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக பொதுமக்களுக்கு மோடி உரையாற்றியுள்ளார்.
இவ்வேளையில், காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தியுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் இரத்துச் செய்யப்படும்.
மருத்துவக் காரணங்களுக்காக வழங்கப்பட்ட விசா அனைத்தும் ஏப்ரல் 29 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும், விசா காலாவதியாகும் முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
அதேபோல், பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்களும் உடனடியாக தாயகம் திரும்ப இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
எனினும் இந்த உத்தரவு நீண்ட கால விசாவை வைத்துள்ள பாகிஸ்தானிய இந்துக்களுக்கு பொருந்தாது என அது விளக்கியது.
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானே இருப்பதாகக் கூறி, அந்நாட்டுடனான உறவுகளை இந்தியா துண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.