நியூ யோர்க், டிசம்பர்-26 – அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் பறவை சளிக்காய்ச்சல் பரவியதில், நவம்பர் பிற்பகுதியிலிருந்து டிசம்பர் மத்தி வரை 20 பெரியப் பூனையினங்கள் மடிந்திருக்கின்றன.
அவற்றில் ஒரு கலப்பு வங்காளப் புலி, cougar எனப்படும் 4 மலைச்சிங்கங்கள் ஆகியவையும் அடங்கும்.
இதுவரை இதுபோல நடந்ததில்லையென, சரணாலயத்தின் நிறுவனரும் இயக்குநருமான Mark Mathews கூறினார்.
வழக்கமாக வயது மூப்பால் தான் அங்கு விலங்குகள் மடிந்து போகும்; ஆனால், இந்த பொல்லாத பறவைக் காய்ச்சலால் ஒரே நேரத்தில் இத்தனை விலங்குகள் மடிந்திருப்பது கவலையளிப்பதாக அவர் சொன்னார்.
மூன்று பூனையினங்கள் கிருமிப் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள வேளை, மற்றொன்று கவலைக்கிடமான நிலையிலிருக்கிறது.
பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதால், சரணாலயம் தனிமைப்படுத்தப்பட்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது; கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் cougar இனத்தைப் பாதித்த பறவைக் காய்ச்சல், பின்னர் மற்ற பூனையினங்களுக்கும் பரவியது.
அவற்றிடம் நிமோனியா போன்ற அறிகுறிகள் காணப்பட்டன; சில நாட்களிலேயே மற்ற விலங்குகளுக்கும் கிருமி பரவி விட்டது.
இந்த பறவை சளிக்காய்ச்சல், கலிஃபோர்னியா மாநில மாட்டுப் பண்ணைகளிலிருந்து பரவுவதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள 984 மாட்டுப் பண்ணைகளில் இதுவரை 659 பண்ணைகளில் அக்கிருமிப் பரவியுள்ளது.