
மணிலா, மார்ச்-16 – பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து கோலாலம்பூர் புறப்பட்ட Malaysia Airlines விமானத்தின் ஓர் இயந்திரம் தீப்பற்றியதால், அது மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.
வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், பறவை மோதியதில் இயந்திரம் தீப்பிடித்ததாக நம்பப்படுகிறது.
எனினும், அதில் எவரும் காயமடையவில்லை என பயணி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
அந்த MH705 விமானம் மணிலா, நினோய் அக்கினோ அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
நடுவானில் இயந்திரத்தில் தீ ஏற்பட்ட புகைப்படத்தை X தளத்தில் @dasunhegoda என்ற ஒரு பயணி பகிர்ந்துள்ளார்.
தங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்த Malaysia Airlines விமான நிறுவனத்துக்கு அவர் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
அவரின் கருத்துக்கு பதிலளித்த Malaysia Airlines, நீங்கள் பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சி என்றும், அந்த இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்துகொண்டதற்கு நன்றி என்றும் கூறியது.
எதிர்பாராமல் நடந்த அச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த அந்த தேசிய விமான நிறுவனம், பயணிகளின் பாதுகாப்பே முக்கியம் என்றது.
விமானத்தின் இடப்பக்க இயந்திரத்திலிருந்து தீப்பிழம்பும் புகையும் வெளியேறும் வீடியோவை பிலிப்பின்ஸ் வான் போக்குவரத்து செய்தித் தளம் முன்னதாக வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.