காஜாங், செப்டம்பர் 13 – கொளுந்து விட்டெரியும் நெருப்பில் சிக்கித் தவித்த முயல்களை 17 வயது இளைஞர் ஒருவர் காப்பாற்றும் காணொளி இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, காஜாங் உத்தாமாவில் இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜேசன் முனியந்திரன் எனும் அந்த 17 வயது இளைஞன் பெரும் கால்வாயைக் கடந்து, பற்றி எரியும் வீட்டில் சிக்கியிருக்கும் முயல்களை துணிச்சலுடன் காப்பாற்றியதை அந்த வைரலான காணொளியில் காணமுடிகிறது.
காணொளியில் நீங்கள் பார்த்ததுபோலத்தான். சில போராட்டங்களுக்குப் பிறகே இரண்டு முயல்களை வெற்றிகரமாக, அதன் கூண்டிலிருந்து வெளியேற்ற முடிந்தது என்று ஜேசன் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.
32 வயது ஜேசனின் அக்கா பாலநாகம்மா-தான், இவரின் துணிச்சலான செயலை டிக் டோக்கில் பதிவேற்றி வெளி உலகிற்குக் காட்டியவர்.
தானும் அவரது கணவரும் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.
பலரும் தீப்பிடித்து எரியும் வீட்டைத்தான் பார்த்தனர். ஆனால், நாங்கள் வீட்டினுள் சிக்கி வெளிவர முடியாமல் தவித்த பறவைகளையும் முயல்களையும்தான் கவனித்தோம்.
இதற்கிடையில், என் தம்பி முயல்களை மீட்பதற்கு முன்பே, அக்கூண்டிலுள்ள பறவைகள் தீயில் கருகின என அச்சம்பவம் குறித்து இவ்வாறு விவரித்தார்.
அந்த வீட்டில் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனக்கூறிய ஜேசன் உதவி கேட்க முடியாத நிலையில் தவித்து கொண்டிருந்த விலங்குகளே தன்னை அவைகளை காப்பாற்ற தூண்டியதாக கூறுகிறார்.
இக்கட்டான காலகட்டங்களில் மனிதர்களோ விலங்குகளோ; யாரையும் விட்டுவிட்டுச் செல்லாதீர்கள்.
முடிந்த உதவியைச் செய்யுங்கள் அல்லது உதவி செய்யக்கூடியவர்களை நாடுங்கள் என்கிறார் இந்த ஹீரோ ஜேசன்.
இவரின் வைரலான காணொளியைத் தொடர்ந்து வலைத்தளவாசிகள் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வரும் நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார் இவர்.