
கோலாலம்பூர், ஏப்ரல்-7, மார்ச் 28-ஆம் தேதி DBKL அமுலாக்க அதிகாரிகளுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சாலையோர பலூன் வியாபாரிக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த அறிக்கைக்காக, போலீஸ் காத்திருக்கிறது.
செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையிலிருந்து முழு மருத்துவ அறிக்கை வர வேண்டியிருப்பதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா தெரிவித்தார்.
தற்போதைக்கு தொடக்கக் கட்ட பரிசோதனை முடிவுகளே கிடைக்கப் பெற்றுள்ளன.
அதில், 28 வயது Za’imuddin Azlan-னுக்கு மண்டை ஓடு உடைந்திருப்பதோடு, மென்மையான திசு காயங்கள் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் 30 நாட்களுக்குள் முழு அறிக்கை கிடைத்து விடும் என எதிர்பார்ப்பதாக ருஸ்டி கூறினார்.
அந்த பலூன் வியாபாரி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் 29-ஆம் தேதி அவ்வாடவரின் தாயார் செய்திருந்த போலீஸ் புகாரோடு இப்புதியப் புகாரும் ஒத்துப்போவதாக ருஸ்டி சொன்னார்.
வைரலான அச்சம்பவம் குறித்த போலீஸ் விசாரணை முழுமைப் பெற்றுள்ளது.
விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக அரசு தரப்பு துணைத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.