Latestமலேசியா

பல்வேறு தொழில்நுட்பத் துறைகளின் வழி இந்தியச் சமுதாய மேம்பாடு பற்றி ஆராய்ந்தது CUMIG–IITM Pravartak பங்காளித்துவக் கலந்துரையாடல்

கோலாலாம்பூர், அக்டோபர்-2 – இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப புத்தாக்க மையமான IITM Pravartak, தொழில்முனைவோருக்கான ஆதரவு மற்றும் பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குவதில் புகழ் பெற்றதாகும்.

இந்நிலையில் மலாயாப் பல்கலைக் கழக இந்திய பட்டதாரிகள் அமைப்பான CUMIG மற்றும் IITM Pravartak இணைந்து நடத்திய முக்கியக் கலந்துரையாடல், நேற்று கோலாலாம்பூர் கோபுரத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

“கல்வி, புத்தாக்கம் மற்றும் சமூகத் தாக்கம்: CUMIG–IITM Pravartak பங்காளித்துவம்” எனப் பெயரிடப்பட்ட இந்நிகழ்ச்சி, தொழில்முனைவோர், கல்வியாளர்கள், நிறுவனத் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் பொது அமைப்புகளை ஒரே மேடையில் கொண்டு வந்தது.

நிர்வாக இயக்குநர் எம். தியாகராஜன் தலைமையில், வணக்கம் மலேசியாவும், ஊடக பங்காளி என்ற முறையில் இந்த கலந்துரையாலில் கலந்துகொண்டது.

அனைத்துலக STEM கல்வி, மனித மூலதன மேம்பாடு, டிஜிட்டல்மயம் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சி ஆகியவை, மலேசிய இந்தியர்களின் எதிர்காலத்திற்கு மிக முக்கியம் என அதில் வலியுறுத்தப்பட்டது.

இந்த உரையாடல், சவால்கள் மட்டுமின்றி ‘மலேசிய இந்தியர்களின் தூரநோக்கு பார்வை 2057 (IM2057)’ கனவை எட்டுவதற்கான வாய்ப்புகளையும் முன்னிறுத்தியதாக CUMIG தலைவர் ஆர். தனசேகர் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

இவ்வேளையில் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு தொழில்நுட்பங்களை மாற்றுவதற்கு இது போன்ற ஒத்துழைப்புகள் வழிகோலும் என, CEO IEC Capital Ventures என Dr புவன் கணேசன் தெரிவித்தார்.

மலேசியாவுடனான ஒத்துழைப்பில், விளையாட்டுத் துறையில் தொழில்நுட்பத்தை எப்படி கொண்டு வருவது என்பது குறித்து தாங்கள் கவனம் செலுத்துவதாக, IITM Pravartak அறக்கட்டளையின் தலைமை செயலதிகாரி ஷங்கர் ராமன் கூறினார்.

கல்வி மற்றும் புத்தாக்கத்தை சமூக முன்னேற்றத்தின் தூண்களாகக் கொண்டு செல்லும் சக்திவாய்ந்த முன்னேற்றமாக, இந்த பங்காளித்துவம் விளங்குகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!