டாமான்சாரா டாமாயில் விலங்குகளை அலட்சியம் செய்த மூடப்பட்ட கால்நடை மருத்துவமனை; நடவடிக்கை கோரிய NGO

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 17 – பெட்டாலிங் ஜெயா டாமான்சாரா டாமாய் பகுதியில் செயல்பாடு நிறுத்தப்பட்ட ஒரு கால்நடை மருத்துவமனையில் விலங்குகள் அலட்சியமாக கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறையும் கால்நடை சேவைகள் துறையும் (DVS) விசாரணை நடத்த வேண்டும் என்று மலேசிய விலங்கு நல அமைப்பான SAFM கோரிக்கை விடுத்துள்ளது.
SAFM அளித்த தகவலின்படி, அந்த மருத்துவமனையில் பூனையும் நாயும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் ஒரு பூனை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக வேறொரு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கடந்த சனிக்கிழமை முன்னாள் பணியாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அந்த மருத்துவமனையின் மீது விலங்கு நலச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று SAFM வலியுறுத்தியது. மேலும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் கால்நடை மருத்துவமனைகளின் பொறுப்புத் தரநிலைகளை கடுமையாக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தது.
இதற்கிடையில், விலங்குகள் மீட்பாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்த பதிவில், சம்பந்தப்பட்ட அந்த விலங்குகள் ஏழு முதல் பத்து நாட்களுக்கு முன்பாக இறந்திருக்கலாம் என்று இரண்டு கால்நடை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாக கூறியுள்ளார்.



