
கமுந்திங், மார்ச்-16 – பள்ளிக் கழிவறையின் மோசமான நிலை குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிடம் மாணவன் புகாரளித்த வீடியோ வைரலாகியுள்ளது.
@norsahida89 என்ற X தள கணக்கில் பதிவேற்றப்பட்ட அவ்வீடியோ, மார்ச் 14-ஆம் தேதி கமுந்திங் இரமலான் சந்தைக்கு பிரதமர் வருகை மேற்கொண்ட போது எடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்களிடம் அளவளாவிச் சென்ற பிரதமர், அங்கு நின்றிருந்த ஆரம்ப பள்ளி மாணவர்களிடமும் நலம் விசாரித்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஒரு மாணவன், தான் படிக்கும் பள்ளியில் 2 கழிவறைகள் உடைந்து விட்டதாகவும் வெறும் 2 கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த முடியுமென்றும் கூறினான்.
அதை பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர், கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக்கின் கவனத்திற்கு அதனைக் கொண்டுச் செல்வதாகக் கூறினார்.
இவ்வேளையில் அவ்வீடியோவைப் பதிவேற்றிய பெண், அச்சம்பவம் ஒன்றும் நேரடி புகாரல்ல என தெளிவுப்படுத்தினார்.
அம்மாணவர்கள் படிக்கும் பள்ளி குறித்து முதலில் பிரதமர் கேட்டதாகவும் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தப்பட்ட மாணவன் கழிவறை குறித்து பேசியதாகவும் சொன்னார்.
வீடியோவின் கீழ் கருத்து பதிவிடும் இடத்தில், ஃபாட்லீனாவும் பின்னர் கருத்து பதிவிட்டது கவனத்தை ஈர்த்தது.
பிரதமரிடமே நேரில் புகாரளித்த மாணவனின் தைரியத்தைப் பாராட்டி வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது.