
செகாமாட், மே-7 – ஜோகூர் செகாமாட்டில் மக்ரிப் தொழுகைக்காகக் பள்ளிவாசல் செல்லும் வழியில் தொப்புள் கொடி அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை வீசப்பட்டிருப்பது கண்டு ஒரு முதியவர் அதிர்ச்சியடைந்தார்.
ஃபெல்டா ரெடோங்கில் சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
வெளியே கிளம்பியவரின் கண்களுக்கு, அவர் வீட்டின் முன்பு ஒரு பழைய பாத்திக் துணியில் சுற்றப்பட்டிருந்த குழந்தைத் தென்பட்டது.
எனினும் பக்கத்தில் கடிதமோ குறிப்போ எதுவுமில்லை.
குழந்தையைத் தூக்கி சுத்தம் செய்து வீட்டினுள் கொண்டுச் சென்றவர், மகளின் உதவியுடன் பின்னர் போலீஸில் புகார் செய்தார்.
தொப்புள் கொடி மற்றும் இரத்தக் கறை படிந்த நிலையை வைத்துப் பார்க்கும் போது ஒரு 4 மணி நேரங்களுக்கு முன்பே அக்குழந்தை பிறந்திருக்க வேண்டுமென போலீஸ் கூறியது.
மேல் பரிசோதனைகளுக்காக அக்குழந்தை தற்போது செகாமாட் மருத்துவமனையின் கண்காணிப்பில் உள்ளது.
குழந்தையை வீசியதன் பேரில் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ள போலீஸ், சம்பவத்தை நேரில் பார்த்திருந்தால் தகவல் கொடுத்துதவுமாறு பொது மக்களின் உதவியை நாடியுள்ளது