
குவந்தான், ஆகஸ்ட் 31 – பஸ்களில் சீட் பெல்ட் எனப்படும் இருக்கைகளுக்கான இடைவார் அணியத் தவறியதற்காக பஸ் ஓட்டுனர்களில் எழுவர் உட்பட 34 தனிப்பட்ட நபர்களுக்கு அபராதம் செலுத்துவதற்கான குற்றப் பதிவுகள் அல்லது சம்மன்கள் வழங்கப்பட்டன.
ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி நேற்றுவரை பஹாங் சாலை போக்குவரத்துத்துறை மேற்கொண்ட சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது இந்த சம்மன்கள் விநியோகிக்கப்பட்டன.
2,196 விரைவு பஸ்கள், சுற்றுலா மற்றும் இதர பஸ்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பஹாங் சாலை போக்குவரத்துத்துறையின் இயக்குநர் சைட் அகமட் கிருலன்வார் ( Syed Ahmad Khirulanwar ) தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் தயாரிக்கப்பட்ட பஸ்களில் சீட் பெல்ட் வசதியை கொண்டிருப்பது மற்றும் அதனை அணிந்துகொள்ள வேண்டும் என்ற அமலாக்க நடவடிக்கையில் சாலை போக்குவரத்துத்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.